Monday, February 6, 2012

The Illusionist (2010)





நல்லா தலைப்பை பார்த்துக்கோங்க.. இது நீங்க எல்லாரும் பார்த்திருக்க கூடிய, 2006ல் ரிலீசான The Illusionist கிடையாது 2010ல் வெளியான L'illusioniste அப்படீங்கற ப்ரெஞ்சு அனிமேஷன் படம். போன வருஷம் ஆஸ்கர்ல நாமினேட் ஆகி, டாய் ஸ்டோரி 3- கிட்ட தோத்துப் போச்சே... அதே படம்தான்!

பெயருக்குத் தான் ப்ரெஞ்சுப் படமே தவிர, இதை பார்க்குறதுக்கு உங்களுக்கு சப்-டைட்டிலே தேவையில்லை.. ஏன் உங்களுக்கு எந்தவொரு மொழியுமே தெரிஞ்சிருக்கத் தேவையில்லை!

பொதுவா மெளன/ ஊமைப் படங்களில்தான் தாக்கம் அதிகம் அழுத்தமாக பதியும்-னு சொல்லிக் கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்கு அதை ஃபீல் பண்ணிட்டுத்தான் இந்த பதிவை எழுதுறேன்! கிட்டத்தட்ட படத்துல டயலாக்கே கிடையாது, வெறும் பின்னணி இசைதான், ரெண்டே ரெண்டு பிரதான கதாப்பாத்திரங்கள்.. ஆனாலும் நம்மள அப்படியே கட்டிப்போட்டு வைத்திருக்கிறது..

ரொம்பவே எளிமையான கதை. பாரிஸ்ல ஒரு காலத்தில் பிரபலமாயிருந்து, இப்போ மவுசு சுத்தமாவே இல்லாமல் போன மேஜிஷியன் ஒருத்தரு, தன்னோட மூட்டை முடிச்சுகளையும், தனது மேஜிக் ஷோக்களில் இவ்வளவு நாளும் பயன்படுத்தி வந்த ஒரு கிழட்டு முயலையும் எடுத்துகிட்டு லண்டன் போயிடுறாரு. "இனிமே ஒரே இடத்துல ஷோ பண்ணாமல், அப்பப்போ இடம் மாறிக்கிட்டே இருந்தாதான் பொழைக்க முடியுங்கறதையும்" புரிஞ்சுக்கிறாரு. அங்க கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்திகிட்டு சின்னச்சின்ன பார்ட்டிகளில் வித்தை காட்டி சில காலம் ஓட்டுறாரு..

பிறகு ஸ்காட்லாந்துல இருக்கற ஒரு தீவுக்கு போயி மேஜிக் ஷோ காட்டுகிறாரு. அந்த தீவுல இருக்கற pubக்கு கொஞ்ச மாசத்துக்கு முன்தான் மின் வழங்கல் விநியோகிக்கப்பட்டிருக்கு. ரொம்ப நாளாவே பொழுதுபோக்கில்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் அத்தீவு மக்களிடையே இவரும், இவரோட முயலும் பெரும் வரவேற்பைப் பெறுகிறார்கள். குறிப்பாக அங்கே இருக்கும் ஆலிஸ்-ங்கற ஒரு இளம் பொண்ணு இவரு நெஜமாவே அசாதாரண சக்திகள் கொண்டவர்னு நம்புகிறாள்!

பிறகு அவரு அந்த தீவை விட்டு எடின்பரா-வுக்கு கிளம்பும் போது, ஆலிஸும் அவர்கூடவே வந்துடுறா.. இனிமே மேஜிக்கை மட்டும் நம்பியிருந்தா வேலைக்காவாதுன்னு பார்ட்-டைமா சின்னச் சின்ன தொழில்களையும் செய்கிறார். ஆனா இந்த விஷயம் ஆலிஸுக்கு தெரியாது... உடலை வருத்திக்கிட்டு உழைக்கற காசைக் கூட, தனக்குனு செலவளிக்காமல் ஆலிஸுக்கு ஷு, சட்டைன்னு கிஃப்டுகளாள வாங்கிக் கொடுக்கிறார். ஆனா அந்தப் பொண்ணு, "இதையெல்லாம் அவரு தன்னோட மேஜிக் சக்தி மூலமாத்தான் உருவாக்கித்தருகிறார்"னே நம்பிக்கிட்டிருக்கிறாள்.

ஒரு பெர்ஃபாமரை மகிழ்விக்குறதுக்காக அர்ப்பணிப்போட(?!) செயல்படுகிற ரசிகர்களை பார்ததிருப்போம். ஆனால் ஒரு ரசிகையை திருப்திப்படுத்துறதுக்காக அர்ப்பணிப்போட செயல்படுற பெர்ஃபாமர்?? கிட்டத்தட்ட இந்தப்பொண்ணுக்கு அப்பா மாதிரியே கவனிச்சுக்கொண்டிருந்த இவரு வாழ்க்கையில ஒரு கட்டத்தில், இவரும் ஆலிஸும் பிரிய வேண்டிய கட்டாயமும் உருவாகிறது.. என்ன நடந்ததுங்கறதை நீங்களே பார்த்துக்கோங்க!

கவனத்தை திசைதிருப்பறா மாதிரி சவுன்டு இல்லாததாலயோ என்னமோ, படம் முழுக்க நமக்குள்ள சிந்தனைகள் புல் ஃபார்ம்ல ஓடும். அதுவும் படத்தோட க்ளைமேக்ஸ் நிச்சயமா உங்களை ஆழமாக தாக்கும்.. கதை முடிஞ்சு க்ரெடிட்ஸ் தொடங்கின உடனேயே எழுந்து ஓடுற ரசிகர் நீங்கனா, க்ரெடிட்ஸுக்கு அப்புறம் வரும் அந்த அழகான சின்ன சீனை மிஸ் பண்ணிவிடக்கூடும் - ஜாக்கிரதை!

Hand drawn cel animation-ங்கறது இப்ப அழிஞ்சுகிட்டே வர்ற அருமையான கலை. அதாவது ஒளி-ஊடுபுகவிடும் செலுலாயிட் தாளின் மேல கையால ஓவியங்களை வரைவது. பிறகு 24 frame-per-second வீதத்தில் ரெக்கார்டு செய்து பாத்திரங்களை அசைவுக்கு உள்ளாக்குவது... இதுல என்ன குறைபாடுன்னா, கேமிரா ஆங்கிளை டக்குனு மாத்த முடியாது. மாத்தினா அதுக்கு இன்னொரு வித்தியாசமான ஓவியம் தேவைப்படும்... அப்புறம் அது வேற ஒரு ஷாட் மாதிரி ஆயிடும்!.. செலவும் ரொம்பவே அதிகம்.
(இந்த படத்துக்கும் செலவான 17 மில்லியன்-ல வெறும் 5.6 மில்லியனைத்தான் திரும்பி வசூலாக எடுக்க முடிந்ததாம்!)

 CG Animation வர்றதுக்கு முன்னாடி இருந்தது இந்த Cel Animation-உம், Stop Motion Animation-உம் தான்..அதுலயும் செல் அனிமேஷன்தான் ரொம்ப பிரபலம்!
பழைய டிஸ்னி படங்கள், பழைய "டாம் அன்டு ஜெரி" சீரீஸ் போன்றவற்றில்தான் இதை பார்க்க முடியும். (இப்ப ஓடுற Tom and Jerry Tales கூட CG தான்!) டாய் ஸ்டோரி வருகையோடு அனிமேஷன் ட்ரெண்டே தலைகீழாக மாறி இந்த Traditional Animationக்கு வேலையே இல்லாம போயிடுச்சு!

நீங்களே ஒரு தடவை இந்த படத்தை பார்த்தீங்கன்னா புரியும் இந்த traditional அனிமேஷன் கான்செப்டையே எந்தளவுக்கு வினைத்திறனா உபயோகிக்க முடியும்னு..
ஹாலிவுட்டோட அனிமேஷன் படங்கள்தான் தரமானதுன்னு நெனைக்குற எல்லாரும் இந்த படத்தை கண்டிப்பா பார்க்கனும்.. நான் கூட அப்படித்தான் இருந்து மாறியிருக்கேன்!
(மொத்தமா சொல்லனும்னா, முதன்முறையா ஒரு பிக்ஸார் படம் ஆஸ்கர் வென்றதுக்கு சிறிது வருத்தப்படுகிறேன்..)

பாத்திரங்கள்- 19
அனிமேஷன்- 19
பின்னணித் தரவுகள்- 18
கதை+திரைக்கதை- 17
இயக்கம்- 18

மொத்தம்- 91% அசத்தல்!

The Illusionist (2010) on IMDb

9 comments:

  1. மிக நல்ல படம்னு சொல்லியிருக்கீங்க. நல்லதோ, கெட்டதோ அனிமேஷன் எனும் ஒரே காரணத்திற்காக பார்ப்பேன். இப்பவே டவுன்லோடப் போகிறேன். ரொம்ப தாங்க்ஸ்.

    ReplyDelete
  2. நான் அனிமேஷன் படங்களை பார்ப்பது குறைவு..இருந்தாலும் தங்களது விமர்சனம் பார்க்க சொல்கிறது.பார்த்துவிடுவோம்..நன்றி.,.நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  3. @ ஹாலிவுட்ரசிகன் - அனிமேஷன் படங்கள் மேல உள்ள உங்க நம்பிக்கைபிடித்திருக்கிறது. பாருங்க.. பார்த்துட்டு உங்க கருத்தையும் சொல்லுங்க.

    @ Kumaran - நல்லது குமரன்! படத்தை பாருங்கள்.. கண்டிப்பாக பிடிக்கும்!

    ReplyDelete
  4. அடடா..என்னிடம் ஒரே ஒரு டிவிடிதான் இருந்தது.அதை... ஒரு திருப்பூர் புத்தகக்கண்காட்சியில் விற்று விட்டேன்.
    விற்றதில் வருத்தமும்...பெருமையும் இருக்கின்றது.
    ஏனென்றால் நான் விற்றது அனாதைக்குழந்தைகள் படிக்கும் ஆசிரமத்துக்கு...

    ReplyDelete
  5. @ உலக சினிமா ரசிகன் - உங்கள் செயல் புல்லரிக்க வைக்குது, சார்!

    ReplyDelete
  6. இந்த படம் பாக்கல தலிவா....ட்ரைலர் பாத்தப்ப, இதான் டோன் மட்டும் மிக வித்தியாசமா இருந்துச்சு..இதுமாதிரி "மாற்று" அனிமேசன் முயற்சிகள் வரவர அதிகமாய்கிட்டே வருது. Fantastic Mr.Fox (Stop anim) இதெல்லாம் உதாரணமா சொல்லலாம்ன்னு நெனைக்கிறேன்

    ReplyDelete
  7. @ கொழந்த - Fantastic Mr.Fox செம படம், அப்பப்போ செஞ்சாலும் இந்த மாதிரி படங்கள் நல்லை வரவேற்பை பெறுதுங்க!!

    ReplyDelete
  8. நல்ல படம் போல...இத்தனை நாள் படம் என்னிடம் இருந்தும் படம் பார்கவில்லை....இப்ப தான் படத்தின் விஷயங்கள் தெரிந்தது. நன்றி பார்கிறேன்.

    ReplyDelete
  9. @ MuratuSingam - படத்தை பாருங்க நண்பா, வருகைக்கு நன்றி!

    ReplyDelete

Related Posts with Thumbnails