Saturday, August 20, 2011

Adjustment Bureau (2011)

காலையில் எழுந்திருச்சி, அவசர அவசரமா ஓடி பஸ்ஸை புடிச்சு வேலைக்கு கிளம்பறது முதல், கம்ப்யூட்டரை ஆன் பண்ணி "என்னடா எழுதலாம்?"னு யோசிச்சு, கிறுக்கி, பதிவை பப்ளிஷ் பண்ணுற வரைக்கும் எல்லாமே நம்ம விருப்பம் படித்தான் நடக்குது.. நாமதான் முடிவை எடுக்கிறோம்... அல்லது நாம முடிவெடு்க்கறதா நினைச்சுகிட்டிருக்கோமா?

நிஜமாவே "விதி"ன்னு ஒண்ணு இருந்து, நம்மை வாழ்க்கையை யாரோ ஒருத்தர், ஏதோவொரு மூலையில் கூலா உட்கார்ந்துகிட்டு டிசைன் பண்ணிக்கொண்டிருந்தால்?? இந்த டவுட்டுக்கெல்லாம் ஒரு தியரியை உருவாக்கி, அதை காதல் கதையொன்றின் மூலம் வெளிப்படுத்தும் படம் தான் "அட்ஜஸ்ட்மென்ட் ப்யூரோ"!

2006ல் யூ.எஸ் செனட் பதவிக்காக போட்டியிடும் காங்கிரஸ்காரரான டேவிட் நொரிஸ் (மாட் டேமன்)-ற்கு மக்களிடையே ஆதரவு இருந்தபோதும், துரதிருஷ்டவசமாக தோற்றுப் போகிறார்.. தன்னுடைய அடுத்த மேடைப்பேச்சில் "மக்களிடம் என்ன காரணம் கூறுவது?" என்பதை ஒத்திகை பர்த்துக் கொண்டிருக்கும்போது, எலீஸ் என்ற பெண்ணை சந்திக்கிறார். இருவரும் பேசிக்கொண்டதிலிருந்து ஒருவரையொருவர் பிடித்துப் போகவே முத்தமும் பகிர்ந்து கொள்கின்றனர்..
அந்தப் பெண்ணின் சந்திப்பால் உற்சாகமடையும் டேவிட், மேடைப்பேச்சில் வெளுத்து வாங்கி, மக்களிடத்தே பெரும் பாராட்டுக்களை பெறுகிறார். 2010ல் நடக்கவிருக்கும் செனட் தேர்தலுக்கு இப்பொழுதே பலம் வாய்ந்த போட்டியாளராக மீடியாக்களால் கணிக்கப்படுகிறார்.

இந்த விதியைக் கன்ட்ரோல் பண்ணும் ஆட்களை உள்ளடக்கிய குழுவுக்கு பெயர்தான் "அட்ஜஸ்ட்மென்ட்  ப்யுரோ". வெளியுலகிற்கு சாதாரண மனிதர்களைப் போலவே இவர்கள் இருப்பார்கள். இவர்களுக்கு ஒரு பெரிய தலைவர் உண்டு. அவர்தான் "பிளானை" உருவாக்கி புத்தகமொன்றில் எழுதி ஏனைய உறுப்பினர்களுக்கு அனுப்பி வைப்பார். ஆனால் அவர் யாரென்பதை வெளியில் சொல்ல மாட்டார்கள். டேவிட் நொரிஸின் விதியை டீல் பண்ணும் உறுப்பினர் "தொம்ஸன்". இவருக்கு 4,5 உதவியாளர்கள்..
இவர்கள் எல்லோரும் கறுப்பு நிறத்தொப்பியொன்றை அணிந்துகொண்டிருப்பார்கள். இந்த தொப்பியை அணிந்து கொள்வதால் அவர்களுக்கு குறிப்பிட்ட சில ஷார்ட்-கட்களை உபயோகிக்க முடியும். அதாவது ரெஸ்டாரன்ட் ஒன்றின் கதவைத் திறந்துகொண்டு பெரிய ஸ்டேடியத்துக்குள் நுழைய முடியும்!!

இவர்கள் மனிதர்களது விருப்பங்களில் குறுக்கிடவேண்டாமேயென்று எண்ணி, ரோம ஆட்சிக்காலகட்டத்தில் ஒரு தடவை மக்களுக்கு சுயமாக முடிவெடுக்க சான்ஸ் வழங்கினார்களாம். ஆனால் இருண்ட யுகம் தொடங்கி மக்கள் மிக்க அவதிப்பட்டனராம். இரண்டாவது தடவை அதேபோல் சான்ஸ் கொடுத்தபோதுதான் உலகப்போர்கள் ஏற்பட்டு உலகம் பெரும் அழிவைச் சந்தித்ததாம். ஆகவே மக்களின் நன்மை கருதியே தாங்கள் தொடர்ந்தும் விதியைச் செயற்படுத்துவதாகச் சொல்கின்றனர்!!

இந்த ப்யுரோ உறுப்பினர்களில் சிலர் டேவிடைப் பிடித்துக் கொண்டு "அவன் எலிஸை மீண்டும் சந்தித்துக் கொள்ளக் கூடாதென்றும், தங்களைப் பற்றி வெளியே வாய் திறந்தாள் அவன் பைத்தியமாக்கப்படுவான்" என்றும் எச்சாரித்து அனுப்புகின்றனர். ஆனால் இந்த மிரட்டல்கள் டேவிடுக்கு, எலிஸை மீண்டும் பார்க்க வேண்டுமென்ற ஆசையைத்தான் தூண்டி விடுகின்றன..
அவன் மீளவும் எலிஸை சந்திக்கும் நடவடக்கைகளில் இறங்கவே, தொம்ஸன் குறுக்கிட்டு பிளானைப் பற்றி மேலும் விளக்குகிறார். அதாவது அவர்கள் சந்தித்துக் கொண்டால் டேவிடின் யு.எஸ் ஜனாதிபதியாக வேண்டிய எதிர்காலமும், எலிஸின் பெரிய பலே டான்சராக வேண்டிய எதிர்காலமும் பாதிக்கப்படுமெனக் கூறுகிறார்.

மேலும் சிறு சாம்பிளுக்காக தொம்சன், எலிஸ் டான்ஸ் ஆடும்போது கீழே விழுந்து காலில் அடிபடும்படி செய்கிறான். ப்ளானின் சீரியஸ்னஸை அறியும் டேவிட் நிதானமாக சிந்திக்கிறான்... தான் விலகியிருப்பதே எலிஸுக்கும் நன்மையென்பதால் ஆஸ்பத்திரியில் அவளைப் பிரிய மனமில்லாமல், தனியே விட்டுச் செல்கிறான்!!
இந்தக் காதல் ஜோடி மீளவும் சந்தித்துக் கொண்டதா? இவர்களால் விதியை மாற்ற முடிந்ததா என்பதே மீதிக்கதை..

படம் அப்பப்போது சறுக்கி சறுக்கி எழுவதால் பார்க்கும்போது ஈடுபாடு கொஞ்சம் குறையலாம்.. மற்றப்படி தேர்தல் காட்சிகளும், ப்யூரோ காட்சிகளும் விறுவிறுப்பானவை. "விதி"ங்கற ரொம்பவே சிக்கலான மேட்டரை வைத்து விளையாடியிருப்பதால் சில லாஜிக் ஓட்டைகள் இருப்பதாக எழும் சந்தேகங்களை தவிர்க்க முடியவில்லை!
ஆனா ஒண்ணு.. இனிமேல் கறுப்புத்தொப்பி அணிந்து கொண்டு வெளியில் உலவுபவர்களைப் பார்த்தாலே கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்!

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 15
இசை = 15
கதை+திரைக்கதை = 15
கலை+ஒளிப்பதிவு = 17
இயக்கம் = 16

மொத்தம் = 78% சூப்பர்

The Adjustment Bureau (2011) on IMDb

4 comments:

  1. இந்த படமும் இன்னும் பாக்கல.....ஒரு வகையான Sci - Fi என்ற அளவில் மட்டும் தெரியும்.

    ReplyDelete
  2. ஆனா படத்துல சயன்ஸை விட காதல் தான் தூக்கலா தெரியுது..

    ReplyDelete
  3. மாட்தாமன்(matt daman) வித்தியாசமான படங்களை தேர்ந்து எடுத்து நடிப்பார்.அதில் இதும் ஒன்று.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி ராக்கெட் ராஜா!
    Leo DiCaprio, Johnny Depp, Matt Damon மூணு பேரும் இருக்கதால இந்த ஜெனரேஷன் ரசிகர்களோட எதிர்பார்ப்புக்கள் பூர்த்தியாகுது!!

    ReplyDelete

Related Posts with Thumbnails