Saturday, October 23, 2010

Angels & Demons (2009)- 2

நியூக்ளியர் ஆராய்ச்சி மன்றத்தில் குப்பி திருடப்பட்ட வேளை, ரோமில் அப்போதைய பாப்பரசர் இறந்து போகிறார்.. வத்திக்கான் மக்கள் சோகத்தில் ஆழ்கின்றனர். அடுத்த பாப்பரசரை தேர்வு செய்வதற்கான கூட்டத்தை நடத்தியாக வேண்டும்.


சாதாரணமாக பாப்பரசரை தேர்வு செய்ய சிஸ்டைன் தேவாலயத்தில் நடக்கும் விஷேட வைபவத்தின் போது திருச்சபை அங்கத்தவர்கள் வாக்களிக்க வேண்டும்.
அதிகூடிய வாக்குகளைப் பெறுபவர் பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்படுவர். புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் ஓட்டுச் சீட்டுகளில் ஒருவகை அமிலத்தைக் கலந்து எரித்துவிடுவர். அப்போது வெண்ணிற புகை வெளியேறும். அப்புகையைக் கண்டதும் கூடி நிற்கும் மக்கள் புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிந்து கொள்வர்.

(2005லிருந்து மணிகளை ஒலித்து கூட்டத்திற்கு தெரிவிக்கும் வழக்கம் கையாளப்படுகிறது..)
ஆனால் அதுவரை யாராவது வத்திக்கானின் தலைமைப் பொறுப்பில் தற்காலிகமாக இருத்தப்பட வேண்டும்.

இங்கேயும் அவ்வாறே தற்காலிக பொறுப்பை இளம் பாதிரியார் கமேர்லேங்கோ ஏற்றுக்கொள்கிறார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக "பிரிஃபெடி" எனப்படும் பாப்பரசராக அதிக சாத்தியமுள்ள நான்கு பேர் கடத்தப்படுகிறார்கள். சிறிது நேரம் கழித்து திருச்சபைக்கு கிடைக்கும் கேசட்டில் "பிரிஃபெடியை கடத்தியது இல்லுமினாட்டி என்றும், பிரிஃபெடி ஒவ்வொரு மணித்தியாலத்துக்கு ஒருவர் என்ற வீதத்தில் கொலை செய்யப்படுவார்கள் என்றும், நள்ளிரவில் வத்திக்கான் நகரமே அழிந்து விடும்" என்றும் மிரட்டல் செய்தியொன்று விடுவிக்கப்படுகிறது.. அதனைத் தொடர்ந்து அன்டிமேட்டரை திருடியதும் இல்லுமினாட்டி தான் என்று அறிகின்றனர்.

இந்த கேஸில் தமக்கு உதவி புரிவதற்காக ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சமய சம்பந்தமான குறியீடுகளை ஆராய்ச்சி செய்து வரும் பேராசிரியர் லாங்டனையும், நியூக்ளியர் ஆராய்ச்சி மன்றத்திலிருந்து விட்டோரியாவையும் வத்திக்கான் போலீஸ் அழைக்கின்றது. இல்லுமினாட்டி செய்தியைக் கேட்கும் லாங்டன், நான்கு கார்டினல்களும் விஞ்ஞானத்தின் நான்கு முக்கிய தூண்களின் பலிபீடங்களில் கொல்லப்படுவார்கள் என்பதை ஊகிக்கிறார். விஞ்ஞானத்தின் நான்கு தூண்கள் "பூமி, காற்று, நெருப்பு, நீர்" என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அவற்றுக்கான பலிபீடங்கள் எவையெவை என்பது தான் யாருக்கும் தெரியாது.

இருந்தாலும், இதில் இல்லுமினாட்டி சம்பந்தப்பட்டிருக்கிறது. இல்லுமினாட்டியின் ஆரம்பகர்த்தா கலிலியோ கலிலி.. எனவே அவரிடமிருந்து தான் க்ளூக்களைப் பெற வேண்டுமென லாங்டன் நினைக்கிறார். லாங்டன் முன்பு தனது ஆராய்ச்சிகளுக்காக கலிலியின் "டியாக்ரம்மா" புத்தகத்தின் நகலொன்றை பெற்றுத்தருமாறு எத்தனையோ முறை வத்திக்கானுக்கு வேண்டுகோள்களை விடுத்திருந்தும், அவை நிராகரிக்கப்பட்டிருந்தன. ஆனால் இம்முறை விசாரணைக்காக அவர் அதை பார்க்க அனுமதிக்கப்படுகிறார்.

பக்கங்களைப் புரட்டி ஆராய்ச்சி செய்கின்றனர். ஒரு பக்கத்தின் மார்ஜினில் எண்ணெயால் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. புத்தகம் லத்தீன் மொழிக்குரியது என்ற போதிலும், அந்த வரி ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.
அதில் "From Santi's earthly tomb with demon?s hole, 'cross Rome the mystic elements unfold.
The path of light is laid, the sacred test, let Angels guide you on your lofty quest."
என எழுதப்பட்டிருக்கிறது. அதாவது விஞ்ஞானத்தின் தூண்கள் "தீப அலங்காரப் பாதை"யின் வழியில் இருக்கின்றன. அப்பாதை சான்டியின் சாத்தான் துளையிட்ட கல்லறையில் தொடங்கி தேவதைகளின் வழிகாட்டலில் செல்லும் எனப் பொருள் தரும்.

சான்டி எனப்படுவது ரபேல் எனப்பட்ட சிற்பக் கலைஞரின் இறுதிப் பெயர். அவரது கல்லறை இருப்பது பன்தியனில். பன்தியன் கட்டடத்தின் கூரை வட்டவடிவாக வெட்டியெடுக்கப்பட்டிருக்கும். அப்போ அதுதான் சாத்தானின் துளை!! உடனே லாங்டன், வேட்ரா, இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏர்னஸ்டோ ஓலிவெட்டி மற்றும் வத்திக்கான் பிரெஞ்ச் காவற்படையின் லெப்டினண்ட் வேலண்டி ஆகியோர் புறப்பட்டு 8 மணிக்கு சில நிமிடங்கள் முன்னராக அங்கு வந்து சேர்கின்றனர். ஆனால் அங்கு யாரும் இருக்கவில்லை.

தவறாக வந்து விட்டோமோ என யோசிக்கும் போதுதான், ஒருவேளை சான்டியின் கல்லறையைக் குறிக்காமல், சான்டியால் செதுக்கப்பட்ட கல்லறையொன்றைக் குறித்திருக்கலாம் என்ற எண்ணம் லாங்டனின் மனதில் வருகிறது. அந்த கல்லறையிருப்பது சான்டா மரியா டெல் போபோலோ தேவாலயத்தில்... அங்கு விரைந்து சென்று பார்க்கும் போது, முதலாவது கார்டினல் எப்னல் கொல்லப்பட்டிருந்தார். அவரது நெஞ்சில் "பூமி" என்ற சின்னம் பதிக்கப்பட்டிருந்ததோடு, உடல் எலிகளால் கடிக்கப்பட்டிருந்தது....

முதலாவது கார்டினலைத் தான் காப்பாற்ற முடியவில்லை.. மற்வர்களையாவது???

8 comments:

  1. சூப்பராக இருக்கு! நல்லா விளக்கமா எழுதிறீங்க!

    ReplyDelete
  2. கருத்துக்களுக்கு நன்றி எஸ்.கே..

    ReplyDelete
  3. நல்ல தொடர் பதிவு நண்பரே. வாசிக்க சுவாரஸ்யமய் இருக்கிறது!

    ReplyDelete
  4. கருத்துக்களுக்கு நன்றி நண்பா..
    கலைஞரேன்னு சொல்லியிருந்தால் வேறு யாரையாவது குறிப்பிட்டு விடலாம் அல்லவா??

    ReplyDelete
  5. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த வருடம் தங்களுக்கு பல இனிய நிகழ்வுகளை அளிக்கட்டும்!

    ReplyDelete
  6. நன்றி நண்பா !!

    ReplyDelete
  7. நண்பரே எப்படி இருக்கீங்க?
    ரொம்ப நாளா எழுதலையே! என்னாச்சு?

    வலைச்சரத்தில் தங்கள் பதிவை அறிமுகப்படுத்தி பயனடைந்தேன்! மிக்க நன்றி!
    http://blogintamil.blogspot.com/2011/03/blog-post_18.html

    ReplyDelete
  8. இந்த ஏப்ரல்ல இருந்து கண்டிப்பா எழுத தொடங்குவேன்.. லிஸ்டுல சேர்த்ததுக்கு நன்றி!!!

    ReplyDelete

Related Posts with Thumbnails