Monday, January 23, 2012

In Time (2011)

 எதிர்காலம் இப்படித்தான் இருக்கும்-னு தினுசு தினுசா ஒரு தியரியை உருவாக்கி, அதை மையப்படுத்திய ஹாலிவுட் படங்கள் ஒவ்வொரு வருடமும் மினிமம் ஒண்ணாவது வந்துகிட்டேதான் இருக்கும்.. போன வருஷம் அப்படி சோர்ஸ் கோட் ஒண்ணுதான் வந்திச்சுன்னு நெனைச்சேன். "இல்லை... நானும் இருக்கேன்"னு இந்தப் படம் வருட இறுதியில் வெளியாகி அந்த லிஸ்டில் சேர்ந்து கொண்டுள்ளது.

"நேரம் பொன்னானது"ங்கற பழங்காலத்து பழமொழியை, அப்படியே நடைமுறைக்கு கொண்டுவந்துருக்காங்க.. இந்தப்படத்தில்!
கதை என்னான்னு பார்ப்பதற்கு முதலில் கி.பி 2161-ல உலகம் எந்தக் கண்டிஷன்-ல இருக்கும்னு பார்த்துட்டு போவோம்.

பிறக்கும் எல்லா மனிதர்களது கையிலேயும் "பச்சை குத்தின" மாதிரி இப்படி ஒரு டிஜிட்டல் நேரம் காணப்படும். 25 வயசு வரைக்கும் எல்லாரும் சாதாரணமாத்தான் வளருவாங்க.. ஆனா அதுக்கப்புறம் மனிஷங்களுக்கு வளர்ச்சியே இருக்காது.. அவங்க கையில இருக்க நேரத்துல 1 வருஷத்துக்கான கவுன்ட்-டவுன் ஆரம்பிச்சிரும். டைம் மட்டும் முடிஞ்சுதோ.. காப்பாத்தவே முடியாது, பொசுக்குன்னு பரலோகம் போயிட வேண்டியதுதான்!!

இந்த யுகத்துல காசுக்கு பதிலாக நேரம்தான் பயன்படுகிறது என்பதால், எல்லாரும் வேலை செஞ்சு, சம்பளமாக கிடைக்கும் நிமிடங்களையோ, மணித்தியாலங்களையோ இணைச்சுக்கிட்டு ஆயுளை கூட்டிக்குவாங்க.. அன்றாட செலவுகளுக்கு சேமிச்ச டைம்ல இருந்து சில நிமிடங்களை கழிச்சுக்குவாங்க.. டைம் லோன்களை வாங்கி நேரத்தை கூட்டவும் முடியும்.. ஒருத்தரு கையை இன்னொருத்தர் பிடிச்சு வைத்திருப்பதன் மூலமாக நேரத்தை அவருக்கு transmit செய்யவும் முடியும்!

வாழ்க்கைதான் இப்படின்னா, சமூகத்தை வகுப்பதிலும் இந்த நேரம் பெரும் செல்வாக்கு செலுத்துது. நகரங்களுக்கு பதிலாக உலகத்தை 12 Time Zoneகளாக பிரித்து வைத்திருக்கிறார்கள். அல்ப ஆயுசுல போற ஏழைகளெல்லாம் Daytonங்கற நகரத்தில வாழ்ந்து அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடுகிறார்கள். New Greenwichங்கற நகரத்துல வாழுற பெரிய மனுசங்களெல்லாம் உட்கார்ந்த இடத்துல இருந்தே செஞ்சுரி, செஞ்சுரியா அடிக்கறாங்க!!!

இந்த படத்தோட கதைக்கு சம்பந்தமான ரெண்டு gangஐப் பற்றியும் நாம தெரிஞ்சுக்கனும்..
முதலாவது கேங் Minutemen. டேய்டன் நகருல திரியுற இந்த 4-பேரு கூட்டத்தோட வேலையே மக்களை மிரட்டி நேரத்தை திருடுறது தான். ஆனா இவங்க செய்யும் திருட்டு, சில வேளைகளில் மக்களின் முழு ஆயுட்காலத்தையும் உறிஞ்சிக் கொள்வதால் கொலைகளாகவும் மாறுவதுண்டு! இந்த கேங்கோட தலைவன் பேரு ஃபோர்ட்டிஸ்.

ரெண்டாவது கேங் Timekeepers. பொலிஸ் மாதிரி! இவங்களோட தொழில் நேரத்துடன் தொடர்பான குற்றவாளிகளை கைது செய்து, தண்டனை பெற்றுத் தருவதுதான்.. இந்த க்ரூப்போட தல - ரேமன்ட் லியன்.

இப்போ கதை என்னான்னா, டேய்டன்ல பொறந்த வில் சாலஸ்-ங்கற தொழிற்சாலை தொழிலாளி, Minutemen கேங் கிட்ட இருந்து 105 வயசான ஹமில்டன்-ங்கற பணக்காரரை காப்பாத்துறார்..  ரொம்பவருஷம் வாழ்ந்ததால வாழ்க்கையில ஈடுபாடு குறைந்து போயிருந்த அந்த ஹமில்டன், தன்னோட ஆயுளில் 5 நிமிஷத்தை மாத்திரம் தனக்கென வைச்சுக்கிட்டு, மீதி 116 வருஷத்தையும் தூங்கிக் கொண்டிருந்த வில் சாலஸின் கைக்கு இடம்மாற்றிவிட்டு இறந்து போகிறார்! உண்மையில் என்ன நடந்தது எனத்தெரியாத Timekeepers ஒரு CCTV ரெக்கார்டிங்க்ல, வில் சாலஸையும், இறந்து கிடந்த ஹமில்டனையும் பார்த்துவிட்டு வில்லை கொலையாளியெனக் கருதுகிறார்கள்!!

புதுப் பணக்காரனான வில் சாலஸ் உடனே நியூ க்ரீன்விச் போய் ஹாட்டல் எடுத்து தங்குவதுடன், சூதாட்டம் மூலமாக இன்னும் பல வருடங்களையும் சம்பாதிக்கிறான்.. அந்த சூதாட்டத்தில் வெயிஸ்-ங்கற ஒரு பெரும் பணக்காரரின் அறிமுகம் அவனுக்கு கிடைக்கிறது. இந்த வெயிஸ் டைம்-லோன் கொடுக்கற ஒரு பெரும் தொழிலதிபர். இவர் 1 மில்லியன் வருடத்துக்கான டைம் சார்ஜை பத்திரமாக தனது லாக்கரில் வைத்திருக்கிறாராம்!! அவரது மகளான சில்வியாவும், வில்லும் பேசிப் பழகி, காதலிக்கத் தொடங்குகிறார்கள்.

ஒருநாள் வெயிஸ் நடத்திய பிரம்மாண்டமான பார்ட்டியொன்றில் வைத்து வில்-லை கைது செய்ய Timekeepers வருகிறார்கள். அவர்களை அடித்துவிட்டு வில், சில்வியாவையும் கூட்டிக்கொண்டு தப்பிக்கிறான். டான்யனுக்கு திரும்பும் இருவரும் நேரத்தை அடிப்படையாக கொண்ட பிரிவினையை அழித்து சமத்துவத்தை நிலைநாட்ட உறுதியெடுக்கிறார்கள். இருவராலும் அப்பணியை நிறைவேற்ற முடிந்ததா? இவர்களை துரத்தி வரும் Minutemen, Timekeepers என்னவானார்கள் என்பது மீதிக் கதை..

வித்தியாசமான கான்சப்ட்டுங்கறதால படம் முதல் பாதியில் செம இன்டரஸ்டிங்கா போகுது. பிறகு வரும் திருப்பங்கள் யூகிக்கக் கூடியதா இருக்கதால கொஞ்சம் சறுக்கியும் விழுது! 10 செக்கனை மாத்திரம் கையில வைச்சுக்கிட்டு மீதியெல்லாத்தையும் பிணையாக வைச்சு சூதாடுற சீனும், வி்ல்லும், ஃபோர்ட்டிஸும் handfight விளையாட்டை வைச்சே ஒருத்தர் டைமை ஒருத்தர் உறிஞ்சுற சீனும் பிரமாதம்!
படத்துல உறுத்தக்கூடிய விஷயம் முதல் விஷயம் என்னான்னா எல்லாரும் 25 வயசுக்காரங்க மாதிரி தெரியாமல் இருப்பதுதான். ஆக்சுவலா படத்தோட ஹீரோயின் Amanda Seyfried மட்டுந்தான் முழு நடிகர் குழுவிலயுமே 25 வயசுள்ள ஒரே ஆளாம்! ரெண்டாவது, பெரிய பட்ஜெட் இல்லைங்கறதால வருங்கால உலகத்தை அவ்வளவு டெக்னாலஜிக்கலான ஒன்றாக காட்ட முடியவில்லை போலும்.. கார்கள் கூட பழைய மாடலுக்கு gadget ஃபிக்ஸ் பண்ணாப்ல இருக்கு..

படம் முடிந்தவுடன், "இவ்வளவு கஷ்டப்பட்டு இவனுங்க சேமிச்சுக்கிட்டிருக்கற அந்த நேரத்தை, நாம பயனுள்ள விதத்துலதான் பயன்படுத்துறோமா?"ன்னு நமக்குள்ளேயே எழும் அந்தக் கேள்வி- டைரக்டரோட சக்சஸ்!!

2012 மாதிரி படமெல்லாம் ரிலீஸ் பண்ணி உலகம் "அழியப் போகுதே"ன்னு ஒரு கும்பல் பயமுறுத்துது. ஆனா இவனுங்க காட்டுற மாதிரித் தான் வருங்காலம் இருக்குமோன்னு நினைக்கும் போது அதுக்கு 2012-ஏ தேவலைன்னு தோணுது..

ரேட்டிங்ஸ்,
நடிப்பு = 14
இசை = 11
கதை+திரைக்கதை = 16
கலை+ஒளிப்பதிவு = 14
இயக்கம் = 15

மொத்தம் = 70% நன்று

In Time (2011) on IMDb

பி.கு - நண்பர் ஹாலிவுட் ரசிகனும் இந்தப் படத்தை பற்றிய பதிவினை எழுதியிருக்காரு.. படத்தில் ஆர்வமாக உள்ளவர்கள் தவறாது அதையும், இங்கு சென்று படித்து வருமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறீர்கள்..

6 comments:

  1. என்னை விட நல்லா விவரிச்சு எழுதியிருக்கிறீர்கள். மிகவும் நன்றி.

    நானும் பதிவை எழுதி ட்ராப்டில் போட்டு வைத்திருக்கிறேன். இன்னும் சற்று நேரத்தில் வெளியிடுகிறேன்.

    ReplyDelete
  2. படத்தின் முதல் பாதி நன்றாக இருந்தது. ஆனால் போக போக ஒரே துரத்தல் என போரடித்து விட்டார்கள்.

    ReplyDelete
  3. அருமை..அருமை..ஒரு படத்தை பார்த்து ரசித்த விதத்தை இவ்வளவு சிறப்பாக சுவாரஸ்யங்கள் கூட்டி எழுதியுள்ளீர்கள்..இந்த படம் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது..நன்றி.

    ReplyDelete
  4. @ ஹாலிவுட்ரசிகன் - நன்றி, உங்கள் பதிவை வாசிக்க ஆவலோடு உள்ளேன்..

    ReplyDelete
  5. @ லக்கி - I agree. முதல் பாதியோடு, ரெண்டாவது பாதியை காம்ப்பேரே பண்ணிக்க முடியாது!

    @ குமரன் - பாராட்டுக்கு நன்றி சகோ! நீங்கள் சயின்ஸ் பிக்ஷனின் ரசிகராக இருந்தால், புதுமையான கான்செப்ட்டுக்காகவாவது படத்தை பார்க்கலாம்..

    ReplyDelete

Related Posts with Thumbnails