Monday, May 23, 2011

Little Big Soldier (2010)

ஜாக்கி சான்... உண்மையான உலக நாயகன்.. சொந்த நாட்டு சிலம்பக் கலையே தெரியாதவன்கூட, தேடித் தேடிப்போய் கராத்தே, குங்ஃபூன்னு கத்துக்க முக்கியமான காரணகர்த்தா!! 25 - 30 வயசுல கூட டூப் போட்டு சண்டை பிடிக்கிற ஹீரோக்களுக்கு மத்தியில 60 வயசுலயும் ரிஸ்க் எடுத்து கலக்குற அதிரடி ராஜா!! குறும்புத்தனமான அசைவுகளாலும், "ஈ.."ன்னு இளிக்கிற "பச்சப்புள்ள" சிரிப்பாலயும், குழந்தை முதல் கிழவன் வரை சுண்டியிழுக்கும் "நம்ம வீட்டு பிள்ளை!".. வேறென்னத்த சொல்ல ஜாக்கியைப் பற்றி??


இந்த ஜாக்கிக்கு இந்த வருஷம் ரொம்பவே ஸ்பெஷலான ஒரு வருஷம்... காரணம் இவரு செஞ்சுரி அடிக்கும் படமான 1911 இந்த வருஷ இறுதியில் வெளியாகிறது.. அதற்கு முதல் வெளிவந்த, அதாவது அவரோட 99வது படம் தான் இந்த லிட்டில் பிக் சோல்ஜர்!

17ம்-18ம் நூற்றாண்டளவில் சரமாரியான தாக்குதல்களுக்கு உள்ளாகி, பெருக்கெடுதோடிய ரத்த வெள்ளத்துக்கும், வறட்சிக்கும் இடையே சீனா தத்தளித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் கதை நகர்கிறது... சீனா முழுதினதும் ஆட்சியைப் பிடித்துக் கொள்ள மாநிலத் தலைவர்கள் உக்கிரமாக தாக்குதல் நடத்தினரே தவிர, இதனால் தங்கள் மக்களுக்கு ஏற்பட நேர்ந்த அவல நிலையைப் பற்றி சற்றும் சிந்திக்காது கண்மூடித்தனமாக செயற்பட்ட காலமிது!!

அப்போதைய சீனாவிலிருந்த படைவீரர்களெல்லாம் கிட்டத்தட்ட அடிமைகள் மாதிரி.. அவர்களது வாழ்நாள் முழுதும் ராணுவ சேவையிலேயே கழிக்க வேண்டும்.. சொந்த ஊரைப் பற்றியோ, குடும்பத்தை பற்றியோ நினைத்தும் பார்க்க முடியாது. மீறித் தப்பித்துச் சென்று, பிடிபட்டாலோ சாவடி தான்!! உயிர் தப்பாது!!

லியாங், வேய் என்பன எப்போதும் முரண்பட்டுக் கொண்டேயிருக்கும் இரண்டு அண்டை மாநிலங்கள். லியாங் மாநிலத்தின் அடிமட்ட போர்வீரனாக வரும் ஜாக்கி தான் ஹீரோ.. இளமைக்காலம் முழுதையும் போருக்கு தொலைத்து தனது 40களில் வாழும் துரதிருஷ்டசாலி... இவனுக்கு பெரிதாக சண்டை தெரியாது. ஆனால் இறந்து விட்டதைப் போல நடிப்பதில் படு கில்லாடி!! உடலில் செங்குத்தாக குத்தக்கூடிய சிறிய போலி அம்பை போட்டுக் கொண்டு ஏதோ வீர மரணம் அடைந்ததைப் போல படுத்துவிடுவான்..

அப்படித்தான் கடைசியாக நடந்த மாபெரும் போரிலும், சின்ன வெட்டுக் காயமுமின்றித் தப்பித்து விடுகிறான். சுற்று முற்றிலும் ஆயிரக்கணக்கான இறந்த உடல்கள்.. கூடிய விரைவில் அந்தப் போரின் முடிவில் இன்னுமொருவனும் உயிருடன் இருப்பதைக் கண்டுபிடிக்கிறான்... அவன் வேய் படைத் தளபதி.. லீ ஹொம் வாங்! ஆனால் தாக்குதலுக்கு இலக்காகி நடக்கக்கூட முடியாத நிலையில்!!

ஜாக்கி முகத்தில் சந்தோஷத் தாண்டவம்!! இந்த வேய் படைத் தளபதியை மட்டும் தனது மன்னனிடம் சென்று ஒப்படைத்தால் போதும்... அடிமை வாழக்கையிலிருந்து விடுதலை பெற்று, முழு சுதந்திரத்துடன் சொந்த ஊருக்குச சென்று, தனது மீதி வாழ்க்கைக் காலத்தையாவது நிம்மதியாக கழிக்கலாம் என்ற எண்ணத்துடன் லீயைக் கட்டிப் போட்டு லியாங்கிற்கு தமது பயணத்தை இருவரும் தொடங்குகின்றனர்.

இதற்கிடையே லீயின் இளைய சகோதரன், தனது சகோதரனைக் கொன்று பதவியைப் பறிக்கும் நோக்குடன் அவனை தீவிரமாக தேடியலைகிறான். ஜாக்கியால் லீயை பத்திரமாக சமர்ப்பிக்க முடிந்ததா?? அவன் விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்ததா?? என்பதே மீதிக்கதை...

லீயை "லிட்டில் சோல்ஜராகவும்" ஜாக்கியை "பிக் சோல்ஜராகவும்" கொண்டு கதை நகர்கிறது.

இந்த லீயிருக்கானே.. சின்ன வயசு தான்னாலும், பெரிய தன்மானக்காரன்... படைவீரர்களைப் பற்றி இகழ்ந்து பேசியதற்காக தன்னைக் காப்பாற்றியவனைக் கூட வெட்டிக் கொன்றுவிடுகிறான்.. லியாங் அரசனிடம் மாட்டுவதைவிட சாவே மேல் என எண்ணி பல தடவை தற்கொலைக்கும் முயற்சிக்கிறான்...

வழக்கமான ஜாக்கி படங்களை விட இதில் ஆக்ஷனும், சிரிப்பும் குறைவாகவே இருக்கிறது.. ஜாக்கி தனது கோமாளித்தனத்தால் படம் முழுதும் எம்மை ஈர்க்கிறார். படம் முழுதும் ஒரே "டஸ்க்" செட்டிங் என்பதை அடிக்கடி உணர்வீர்கள்.. மரம் இருக்கும், நீர் இருக்கும்.. ஆனால் கலர் இல்லை. திடீரென்று ஜாக்கியின் கனவில் பச்சைப் பசேலாக வந்தவுடன், நிஜமாகவே எங்களுக்கும் ஜாக்கியின் சொந்த ஊருக்கு போய்விட வேண்டும் போலிருக்கும்!!!

இந்த கதையை 20 வருஷத்துக்கு முன்னாடி ஜாக்கி, தன்னை "லிட்டில் சோல்ஜராக" நினைத்துதான் எழுதினாராம். ஏதோ தடங்கல்களால் பல வருடங்கள் கழித்து, இதைப் படமாக்கும் வாய்ப்பு வரவே "பிக் சோல்ஜராக" நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.. ஆனாலும் லிட்டில் சோல்ஜர் யாரென்பதில் சிக்கல். ஜாக்கிக்கு "டானியல் வூ" வை நடிக்க வைக்க ஆசை.. ஆனால் ஜாக்கியின் மனைவிக்கோ தங்கள் மகன் "ஜெய்சீ சான்"-ஐ நடிக்க வைக்க ஆசை. பின்னர் இரண்டும் மிஸ்ஸாகி லீஹொமை நடிக்க வைத்திருக்கின்றனராம்!!

ரேட்டிங்ஸ்,

நடிப்பு = 17
இசை = 13
கதை+திரைக்கதை = 16
கலை+ஒளிப்பதிவு = 14
இயக்கம் = 16

மொத்தம் = 76% மிக நன்று

4 comments:

 1. ஜாக்கி படம் கண்டிப்பாக ஒரு தடவையாவது ரசித்து பார்ப்பது போல் தான் இருக்கும். இந்த படம் இன்னும் பார்க்க வில்லை.

  அடுத்த படம் ஜாக்கியின் நூறாவது படம் பற்றிய தகவல் அறியாத ஒன்று

  ReplyDelete
 2. வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பா!!

  ReplyDelete
 3. One of his best movie =))

  ReplyDelete

Related Posts with Thumbnails