Tuesday, May 3, 2011

The King's Speech (2010)

"சிறந்த படம்" உள்ளடங்கலாக, 4 ஒஸ்கார் வாங்கற அளவுக்கு ஒரு கதை சொல்லுங்களேன்??
என்னது "அமெரிக்கா உலகத்தை அழிவுல இருந்து காப்பாத்துதா?"... வேணாம்.வேணாம்.. நாம இந்த படத்தோட கதைக்கே போவோம்!!

பிரித்தானியாவைக் கடியாண்டு வரும் 5ம் ஜோர்ஜ் மன்னனுக்கு 2 மகன்கள். முதலாவது மகன் பெயர் டேவிட். அவர் வேல்ஸின் இளவரசனாக இருக்கிறார். 2வது மகன் பெயர் அல்பேர்ட்(சுருக்கி "பேர்ட்டி"). அவர் யோர்க் பிரதேசத்தின் டியூக் ஆக இருக்கிறார். தந்தைக்கு, தனக்கு பிறகு மூத்த மகன் டேவிட் அரசனாவதைக் காட்டிலும் இளைய மகன் அரசனாக வேண்டுமென்பதே விருப்பம். ஆனால் அதில் ஒரு சின்ன சிக்கல்..... பேர்டிக்கு திக்கித் திக்கித்தான் பேச வரும்!!


படத்தின் ஆரம்ப சீன் இதுதான். பிரிட்டிஷ் அரச கண்காட்சி "வெம்ப்ளி" ஸ்டேடியத்தில் நடக்கிறது. அதன் இறுதியுரையை அல்பேர்ட் பேச வேண்டும். அல்பேர்ட் 75,000 மக்கள் கூடியிருந்த ஸ்டேடியத்தின் முன்னால் வந்திருந்து வாயைத்திறக்கிறார்.. வார்த்தைகள் வரவேயில்லை. கேட்டுக்கொண்டிருக்கும் மக்களுக்குள் ஒரு சஞ்சலம் நிலவுவதைப் புரிந்து கொள்கிறார். முடியமையாலும், அவமானத்தாலும் முகம் சிவக்கிறது... வாய் தடுமாறுகிறது..

இந்த நிகழ்வுக்குப் பிறகு அல்பேர்ட் பேச்சுக்கான சிகிச்சைகள் சில எடுத்துக் கொள்கிறான். எதுவும் பயனளிக்கவில்லை. அல்பேர்டின் மனைவி எலிஸபெத் (ஆமா.. இந்த நடிகையை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!) லண்டனிலிருக்கும் அவுஸ்திரேலிய ஸ்பீச் தெரபிஸ்டு, லியனல் லோக்-ஐ சந்தித்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்கிறாள்.
ஆனால் லோக், அல்பேர்ட்-ஐ சாதாரண பேஷண்டு போல்தான் நடத்துகிறார். சிகிச்சைகள் மாளிகையில் நடத்தப்படவில்லை.. லோக்கினுடைய சிறிய வீட்டில் நடக்கிறது. "டியூக் ஒஃவ் யோர்க்" என்றுகூட பார்க்காமல் பேர்ட்டி என்றுதான் கூப்பிடுகிறார்.

முதல் பேச்சுப் பயிற்சியின்போது, பேர்டியை காதில் ஹெட்போன் அணியச்செய்து பாட்டுக் கேட்டுக்கொன்டே, ஷேக்ஸ்பியரின் "ஹம்லெட்" கதையிலுள்ள ஒரு பந்தியை வாசிக்கச் செய்கிறார். அவர் வாசிப்பதை லோக் கிராமபோன் மூலமாக ரெக்கார்ட் செய்கிறார். பேர்டிக்கு தான் திக்கித்திக்கியே வாசிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அத்துடன் லோக்கின் பயிற்சி முறை வேறு தனக்கு சுத்தமாக பிடிக்காததால் கோபத்துடன் வெளியேறுகிறார். போகும்போது லோக், பதிவு செய்த சீடியை கையில் கொடுத்தனுப்புகிறார்.

மறுநாள் 5ம் ஜோர்ஜ் மன்னர் (இந்த முகம் கூட ரொம்ப ஃபேமிலியரா இருக்கே!) அரசமாளிகையில் மக்களுக்கு வானொலி மூலமாக கிறிஸ்துமஸ் தின வாழ்த்துச் செய்தியை வாசிக்கிறார். வாசித்து முடிந்ததும் அல்பேர்ட்டிடம் ஒளி,ஒலிபரப்புக்களின் முக்கியத்தை கூறுகிறார். "டேவிட் நாட்டுக்கு அரசனானனால், அரச குடும்பத்துக்கும், நாட்டுக்கும் பெரிய களங்கத்தை ஏற்படுத்துவான். அவனுக்கு பதில் மன்னனாக நீ வருவதற்கு இப்போதே ஆயத்தமாகு!!" எனக்கூறி தான் வாசித்த அதே வாழ்த்துச் செய்தியை வாசிக்கச் சொல்கிறார். மறுபடியும் முயற்சி தோல்வியடைகிறது...

அன்றிரவு அல்பேர்ட் லோக் கொடுத்த சீடியை ப்ளே செய்து பார்க்கிறான்.... என்ன ஆச்சரியம்! அவன் தடுமாறாமல் "ஹம்லெட்" கதையை சீராக வாசித்திருக்கிறான். பிறகென்ன மறுநாளிலிருந்து தவறாமல் லோக்-இன் பேச்சுப் பயிற்சிகளுக்கு போகிறான்... கூடிய சீக்கிரமே அல்பேர்ட்டிற்கு லோக் மீது நம்பிக்கை ஏற்படுகிறது. தான் சிறுவயதில் சந்திக்க நேர்ந்த துன்பங்களை நினைவுகூருகிறான்.

அவன் இயற்கையில் இடது கைப்பழக்கம் உள்ளவனாக இருந்ததாகவும், அப்பா அவனை தண்டித்தே வலது கைக்கு மாற்றியதாகவும், தனது முழங்கால்கள் முட்டுவதை தவிர்க்க தாங்கிக்கொண்ட வேதனையான சிகிச்சைகள் பற்றியும், தன்னை பராமரித்த nanny, அண்ணனுக்கு மட்டும் அதிக பாசத்தை காட்டி, தனக்கு ஒழுங்காக உணவு கூட கொடுக்காததையும், தம்பி ஜோன் 1919ல் சிறுவயதிலேயே மரணமடைந்தது தன்னை எவ்வளவு பாதித்ததெனவும் லோக்கிடம் மனம்விட்டுப் பேசுகிறான்.

படத்தின் இறுதியில் அல்பேர்ட், "6ம் ஜோர்ஜ்" என்ற பெயரில் மன்னாகிறான் (எப்படி ஆகிறான் என்பதற்காவது நீங்க படத்தை பார்த்தாகனும்). 2ம் உலகப்போர் காலகட்டத்தின் போது, அல்பேர்டின் மேடைப் பேச்சுக்களிலெல்லாம் லோக் உடனிருந்ததாகவும், லோக்கின் சேவைகளைப் பாராட்டி அவர் 1944ல் அரச விக்டோரியன் ஆணைக்குழுவின் கமான்டராக நியமிக்கப்பட்டதாகவும் பட இறுதியில் உண்மைத் தகவல்கள் சொல்லப்படுகின்றன.
அல்பேர்ட்டாக நடித்திருக்கும் கொலின் ஃபேர்த் உண்மையிலேயே ஒரு நடிப்பு பல்கலைக்கழகம்... வசனங்கள் புரியாத காட்சிகளிலும் கூட அவரது நடிப்பு பேசுகிறது!!! இயக்குனர் அபரிமிதமாக உழைத்திருப்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது... ஒவ்வொரு காட்சியும் கன கச்சிதம்!!

ஹாரி பாட்டர் படங்களைப் பார்ப்பவர்களா நீங்கள்?.. அப்போ உங்களுக்கு இந்த ரென்டு பேரையும் கண்டிப்பா தெரிந்திருக்கும்..
எலிஸபெத் ராணியாக நடித்திருப்பது பெலாட்ரிக்ஸ் லெஸ்ட்ரேஞ்!! நிஜப் பெயர் ஹெலனா பொன்ஹம் கார்ட்டர்.
5ம் ஜோர்ஜ் மன்னனாக நடித்திருப்பது அல்பஸ் டம்பிள்டோர்!! நிஜப்பெயர் மைக்கல் கேம்பொன்.


ஆமா.. எல்லோரும் அல்பேர்ட்டோட பேரனின் திருமணத்தை போன மாசம் பார்த்துட்டீங்கள்ல??
ரேட்டிங்ஸ்,

நடிப்பு = 18
இசை = 14
கதை+திரைக்கதை = 17
கலை+ஒளிப்பதிவு = 15
இயக்கம் = 17

மொத்தம் = 81% மிக நன்று

1 comment:

  1. சிறப்பான விமர்சனம்..வாழ்த்துக்கள்..நன்றி

    ReplyDelete

Related Posts with Thumbnails