Saturday, September 25, 2010

Shutter Island (2010)-1

லியனார்டோ டிகாப்ரியோ நடித்த படங்களை பிடித்த வரிசையில் அடுக்கச் சொன்னால் டைட்டானிக், இன்செப்ஷனுக்குப் பிறகு இந்தப் படத்தைத் தான் தேர்ந்தெடுப்பேன். படம் ரிலீசான ஒரு மாதத்திலேயே படம் பார்த்துவிட்டேன். ஆனால் அப்போது என்னால் கதையை முழுதாக விளங்கிக் கொள்ளவில்லை. படத்தை இரண்டாவது தடவையாகப் பார்க்கும் போது தான் குழப்பம் தீர்ந்தது...
இப்படம் டென்னிஸ் லிஹேனால் எழுதப்பட்ட shutter island நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட, ஸ்கார்சேஸி-டிகாப்ரியோ கூட்டணியில் உருவாகும் 2வது படமாகும். இந்தப்படத்தை முதல்தடவை பார்க்கும் போது ஒருமாதிரியும், 2ம் தடவை பார்க்கும் போது வேறு மாதிரியும் தென்படும்... அதாவது ஒரே கல்லுல ரென்டு மாங்கா!!

குழப்புகிறதா?.... படத்தின் கதை ஒன்று தான். ஆனால் முதல் தடவையின் போது ஹீரோவின் பார்வையிலும் (கிட்டத்தட்ட 1st person view)
2வது தடவை ஹீரோ தவிர்ந்த ஏனைய பாத்திரங்களின் பார்வையிலும் (இது 3rd person view) படத்தை அனுபவிப்பீர்கள்..

கதையை முடிந்தளவு குழப்பாமலே சொல்ல முயற்சிக்கிறேன்..


1954ல் யு.எஸ்.மார்ஷலான எட்வார்ட் "டெடி" டானியலும், அவனுக்கு உதவியாக அனுப்பப்படும் "சக்" ஓலும் மனநிலை பாதிக்கப்பட்ட குற்றவாளிகளுக்கான "ஆஷ்கிளிஃப்" மருத்துவமனை அமைந்துள்ள தீவுக்கு காணாமல் ஒரு கேஸ் சம்பந்தமாகச் செல்கின்றனர். அந்தத் தீவில் சிகிச்சை பெற்றுவரும் மனநோயாளிகளில் ஒருவரான ராச்சேல் சொலான்டோ எனும் பெண் பூட்டப்பட்ட அறையிலிருந்து மாயமாக காணாமல் போயிருக்கிறாள். அவளைப்பற்றி விசாரிக்கவே டெடி அழைத்து வரப்பட்டிருக்கிறான்.
ஷட்டர் ஐலன்டில் சிகிச்சைப்பிரிவுகள் மூன்று விதமாக பிரிக்கப் பட்டுள்ளன. A பிரிவு ஆண்களுக்கானது. B பிரிவு பெண்களுக்கானது. C பிரிவு மிகக் கொடூரமான நோயாளிகளுக்கானது. மொத்தம் 66 நோயாளிகள் அங்கு இருக்கிறார்கள்.

அங்கு டாக்டர் காவ்லி என்பவரிடம் விசாரிக்கும் போது அவர், ராச்சேல் தனது மூன்று பிள்ளைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொன்றதால் இங்கு சேர்க்கப்பட்டிருந்தாள் எனக் கூறுகிறார்.
டெடி தனது விசாரணையின் முதற்கட்டமாக அவளது ரூமில் சென்று பார்க்கிறான். அங்கு "who is 67?" எழுதப்பட்ட துண்டொன்று கிடைக்கிறது
டெடி தீவிலுள்ள கலங்கரை விளக்கத்தைப் பார்த்து அங்கு தேடிப்பார்த்தீர்களா எனக் கேட்கும் போது மருத்துவமனை ஊழியர்கள் ஆமாம் என்று தலையசைக்கிறார்கள். பின் டெடி ஹாஸ்பிட்டலின் பதிவேடுகளைக் கேட்கும் போது அவர்கள் தர மறுக்கிறார்கள்.

வேறு துருப்புக்கள் கிடைக்காததால் டெடி மருத்துவமனையிலுள்ள தாதியர்களையும், நோயாளிகளையும் விசாரிக்கிறான். ராச்சேலுக்கு சிகிச்சையளித்துவந்த டாக்டர் சீஹான் அவள் தலைமறைவான பின் விடுமுறைக்காக வெளியே சென்றிருப்பதாக கூற டெடியின் எதிர்பார்ப்பு நிலைகுலைகிறது. நோயாளிகளை விசாரிக்கும் போது பெண்ணொருத்தி யாருக்கும் தெரியாமல் ரகசியமாக டெடியிடம் காகிதமொன்றில் எழுதிக் கொடுக்கிறாள். அதில் "ஓடு" என எழுதப்பட்டுள்ளது.

டெடியின் மனைவி டொலரஸ் சனல், ஆன்ட்ரூ லாடிஸ் என்பவன் பற்ற வைத்த நெருப்பால் 2 வருடங்களுக்கு முன் இறந்து போயிருக்கிறாள். இதனால் கைது செய்யப்பட்ட ஆன்ட்ரூ இதே தீவில் தான் சிகிச்சைக்கு வைக்கப்பட்டிருந்தான். ஆனால் திடீரென ஒருநாள் மாயமாய் மறைந்து போயிருக்கினாறான். டெடி ஷட்டர் ஐலன்ட் வந்த இரவன்று, அவன் உறங்கும் போது கனவில், அவனது மனைவி தோன்றி, "ராச்சேலும், ஆன்ட்ரூவும் எங்கும் செல்லவில்லை. இங்குதான் இருக்கிறார்கள்" என்கிறாள். இதனால் டெடி தனது வேட்டையை தீவிரமாக்குகிறான்!

இது வரை இது ஒரு துப்பறியும் கதை......

மறுநாள் டாக்டர் காவ்லி ராச்சேல் திரும்பக் கிடைத்துவிட்டாள் எனக் கூறி அவளை டெடியிடம் அழைத்து வருகிறார். ராச்சேலுக்கு டெடியைக் கண்டதும் 2ம் உலகப் போரில் இறந்ததுபோன தனது  கணவனின் நினைவு வர டெடியை கட்டித் தழுவுகிறாள்.
இதற்கிடையே டெடி மனைவியினதும், 2ம் உலகப் போரினதும் நினைவுகளாலும், விம்பங்களாலும் அடிக்கடி அவதிப்படுகிறான். இதனால் காவ்லியிடமிருந்து அஸ்பிரின் மாத்திரைகளும் எடுத்துக் கொள்கிறான்.

ராச்சேல் திரும்பக் கிடைத்திருந்தாலும், ஆன்ட்ரூவைக் கண்டுபிடிக்கும் வரை ஓய்வதில்லை என தீர்மானிக்கும் அவன் யாருக்கும் தெரியாமல் சக்குடன், C வார்டுக்கு செல்கிறான். அங்கே நொய்ஸ் எனும் நோயாளி, இந்த விசாரணையெல்லாம் டெடியின் நன்மைக்காகத்தான் எனக் கூறுகிறான். இதனால் சற்றே குழம்பிப் போகிறான் டெடி. அங்கு தேடியும் ஆன்ட்ரு கிடைக்காததால் கலங்கரை விளக்கத்துக்குள் புக எண்ணுகிறான்.


ஐலண்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் அங்கு செல்வது கஷ்டம்.. பாறைகள் வழியே செல்ல டெடி எடுத்த முயற்சி தோல்வியில் முடிந்தது.
திரும்பி வந்து பார்க்கையில் சக் பாறை உச்சியிலிருந்து விழுந்து இறந்து கிடக்கிறான்!!!
டெடி பாறைகளின் அடிப்பகுதியின் இடையே சிறு குகையொன்றிருப்பதைப் பார்க்கிறான். அங்கே ஒரு பெண் அமர்ந்திருக்கிறாள். அவள், நான்தான் உண்மையான ராச்சேல் எனவும், "ஆஷ்கிளிஃப் மருத்துவமனை என்ற பெயரில் நோயாளிகளை வைத்து கொடூரமான பரிசோதனைகளை கலங்கரை விளக்கத்து அறையில் செய்கிறார்கள்" எனவும் கூறுகிறாள்.

இறுதியாக ஷட்டர் ஐலன்டின் மர்மங்களை கிழித்தெறியும் நோக்கில் டெடி கலங்கரை விளக்கத்துக்கு வந்து சேர்கிறான்.
அங்கே...

இது வரை இது ஒரு த்ரில்லர் கதை...

டாக்டர் காவ்லி டெடியைப் பார்த்து, "உனது பெயர் டெடி இல்லை.. உன்னுடன் சக் என்று யாரும் வரவில்லை.. நீதான் ஆன்ட்ரூ லாடிஸ்... மனநிலை சரியில்லாத உனது மனைவி தவறுதலாக உனது மூன்று பிள்ளைகளையும் கொன்று விட, நீ பதிலுக்கு அவளைக் கொன்றாய்.. அதனால் தான் உன்னை இங்கு நோயாளியாக சேர்த்தோம்... நீதான் 67வது நோயாளி... ராச்சேல் என்று யாருமே இருக்கவில்லை.. நீ உன்னை நீயே டெடி என்ற மார்ஷலாக நினைத்துக் கொண்டிருந்தாய்.. உன்னை வழிக்கு கொண்டுவரத்தான் இப்படியொரு நாடகத்தையே நடத்தினோம்..." எனக் கூறுகிறார்.
அப்போது அங்கே சக் வந்து, தான் டாக்டர் சீஹான் எனவும், தான்தான் ஆன்ட்ருவுக்கு (டெடி) சிகிச்சையளிப்பவர் எனவும் கூறுகிறார். டெடியும் நடந்ததெல்லாம் தனது கற்பனைதான் என ஒத்துக் கொள்கிறான்!!

இப்ப இது சைக்காலஜி கதை....


மற்றவர்கள் எல்லோரும் (சக் உட்பட) சொல்வதால்தான் டெடி ஒத்துக் கொள்கிறானா? அவனுக்கு கொடுக்கப்பட்ட அஸ்பிரின் மாத்திரையெல்லாம் போதை வஸ்துக்களா? ஆஷ்கிளிஃப் இப்படித்தான் மனநிலை நன்றாக உள்ளவர்களையும் பைத்தியமாக்கி வருகிறதா? அல்லது காவ்லி சொல்வது தான் உண்மையா? அப்படியானால் ஏன் இப்படியொரு நாடகம்?

இந்தக் கேள்விகளுக்கெல்லாம் புத்தகத்தை வாசிக்காமல் முதல் தடவை படம் பார்க்கும் போதே விடை தெரிந்திருந்தால் நீங்கள் அதிமேதாவி..
இல்லையென்றால்.. (அட என்ன மாதிரியே இருக்கீங்களே!!) 2வது தடவை 3rd person viewல் பார்த்துத் தான் புரிஞ்சுக்கனும்...
எப்படி புரிஞ்சுக்கறது?

அடுத்த பதிவில் தொடரும்..

4 comments:

  1. நான் முதல் தடவை 1வது வியூவில் பார்க்க போகிறேன். விமர்சனம் நல்லாயிருக்கு. எழுத்து நடை சிறப்பாகிக் கொண்டே வருகிறது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. நன்றி.. எல்லாம் உங்களைப் போன்றவர்கள் அளிக்கும் ஆதரவுதான்!!
    பாருங்கள்.. படம் கண்டிப்பாகப் பிடிக்கும்!!

    ReplyDelete
  3. அருமையான படம் நான் hbo வில் பார்த்தேன் .நல்ல விமர்சனம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. @ ராக்கெட் - இந்த பதிவை எழுதி கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகின்ற போதும், வாசித்து அதற்கு பாராட்டி விட்டுச் செல்லும் உங்க நேர்மை எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு..

    ReplyDelete

Related Posts with Thumbnails